விரும்பிய ஆடையை உடுத்திக்கொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது, பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்துங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சில கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களிடையே மத ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தால் ஷிமோகா, உடுப்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதுடன் கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறின.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்களை இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூட ஆளும் பா.ஜ.க. அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், “பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் எந்த வகையான ஆடையை உடுத்துவது என்ற உரிமை பெண்களுக்கு இருக்கிறது. இதனை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது.

பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், உத்தர பிரதேச தேர்தலில் பயன்படுத்தி வரும் “நான் பெண் என்னால் போராட முடியும்” என்ற முழக்கத்தையும் அதில் பதிவிட்டுள்ளார்.