மும்பை

ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்ட பி எம் சி வங்கிக்கும் பாஜகவுக்கும்  தொடர்பு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று முன் தினம் ரிசர்வ் வங்கி பி எம் சி வங்கியின் பல சேவைகளை ஆறு மாதங்களுக்கு முடக்கி உள்ளது.  இந்த  கூட்டுறவு வங்கியின் வாராக்கடன்கள் ரூ. 2500 கோடியைத் தாண்டி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   தற்போது புதிய கடன்கள் எதையும் வங்கி வழங்க முடியாது.    மேலும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி வாடிக்கையாளர்களால் ஒரு நாளைக்கு தங்கள் கணக்கில் இருந்து ரூ. 1000 மட்டுமே எடுக்க முடியும்.

இந்த வங்கியின் இணை இயக்குநரான ராஜ்நீத் சிங் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான சர்தார் தாரா சிங்கின் மகன் ஆவார்.  தாரா சிங் முலுந்த் தொகுதியில் இருந்து நான்கு முறை பாஜக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார்.  ராஜ்நீத் சிங் ஒரு பாஜக உறுப்பினர் ஆவார்.  தற்போது 75 வயதாகும் தனது தந்தைக்குப் பதில் தனக்கு முலுந்த் தொகுதி அளிக்கப்பட வேண்டும் என ராஜ்நீத் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக்  கூறப்படுகிறது.

ராஜ்நீத் சிங், “நான் 13 வருடங்களாக வங்கியின் இயக்குநராகப் பதவியில் இருக்கிறேன்.   எனக்கு வங்கியில் அன்றாடம் நடைபெறும் விஷயங்கள் மற்றும் கடன் அளிப்பது பற்றி எதுவும் தெரியாது.    நாங்கள் ரிசர்வ் வங்கியிடம் தினசரி பணம் எடுக்க விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.   எனவே வாடிக்கையாளர்கள்  பீதி  அடைய வேண்டாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சஞ்சய் நிருபம்,  ”இந்த வங்கி விவகாரத்தில் அனைத்து இயக்குநர்களுக்கும் பொறுப்பு உள்ளது.   இந்த வங்கியின் அனைத்து இயக்குநர்களும் பாஜக உறுப்பினர்கள் ஆவார்கள்.   இயக்குநர்கள் போலியான தணிக்கை அறிக்கை அடிப்படையில் பல நிறுவனங்களுக்குக் கடன் அளித்துள்ளனர்.   இதனால் வாடிக்கையாளர்களின் தற்போதைய நிலைக்கு அவர்களே பொறுப்பு ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.