சென்னை:
தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசிகளாக உயர்த்தியுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்துக்கு குறைவான அளவில் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நேரடியாக தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய இயலாத நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசிகளாக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.