டெல்லி: தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது  என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் (ஆகஸ்டு 11ந்தேதி) முடிவடைகிறது. முன்னதாக மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் அவைகளை முடக்கி வந்தனர். இருந்தாலும் பல மசோதாக்களை நிறைவேற்றிய மத்தியஅரசு, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து வந்தது.

இந்த நிலையில், குலசை விண்வெளி தளம் அமைப்பது மற்றும், இந்திய விண்வெளி கொள்கை – 2023  குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மாநிலங்களவையில் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதில்,  விண்வெளி பொருளாதாரத்தின் முழு மதிப்புத் தொடரிலும், அரசு சாரா நிறுவனங்களின் (என்.ஜி.இ) மேம்பட்டப் பங்கேற்புக்காக இந்திய விண்வெளி கொள்கை – 2023 இன் படி, இஸ்ரோ உருவாக்கிய சிறிய செயற்கைக்கோள் செலுத்து வாகனங்களைச் (எஸ்.எஸ்.எல்.வி) செலுத்துவதற்தாக தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த விண்வெளி தளம் சிறிய செயற்கைக்கோள் செலுத்தும் வகையில் இருக்கும் என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், விண்வெளி பொருளாதாரத்தின் முழு மதிப்புத் தொடரிலும், அரசு சாரா நிறுவனங்களின் (என்.ஜி.இ) மேம்பட்டப் பங்கேற்புக்காக இந்திய விண்வெளி கொள்கை – 2023 இன் படி,இந்தத் துறையைத் திறக்கிறது என மாநிலங்களவையில் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

“விண்வெளி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அங்கீகாரம் அளிப்பதற்கும் ஒற்றைச் சாளர நிறுவனமாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தை (ஐ.என்-எஸ்.பி.ஏ.சி) மத்திய அரசு அமைத்துள்ளது.

இதற்காக கடந்த 2021-22ம் ஆண்டு பட்ஜெட்டில்  ரூ.10 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில்   ரூ. 33 கோடியும்,  2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில்   ரூ.95 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுபோல,  லிகோ-இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2600 கோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது அணுசக்தித் துறையை முகமையாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் முடிந்ததும், ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவதற்கும் வானியல் தொடர்பான துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்கும் லிகோ-இந்தியா ஒரு தேசிய வசதியாக இயக்கப்படும் என்று அவர் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே விண்வெளி மையம் அமைக்க இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள  நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.  2019 டிசம்பரில் விண்வெளிக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு தொடங்கியது. விண்வெளி நிலையத்தை அமைப்பதற்காக மாதவன்குறிச்சி, படுகாபத்து மற்றும் பள்ளக்குறிச்சி ஆகிய மூன்று கிராமங்களில் சுமார் 2,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.