டில்லி:
வரும் 14 ஆம் தேதி காவிரி வரைவுத்திட்டம் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்து உள்ளார்.
காவிரி வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி உச்சநீதி மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேணடும் என்றும், தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கும் உத்தரவிட்டது.
ஆனால், மத்திய அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல், காலம் தாழ்த்தியது. இறுதியில் ஸ்கீம் என்றால் என்று விளக்கம் கேட்டது. தமிழக அரசு சார்பில் மத்தியஅரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
ஆனால், மத்திய அரசோ எதற்கும் செவிமடுக்காமல், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் 2 வார கால அவகாசம் என கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துறை செய்தது. மேலும் இந்த மனுவை மே 3 ஆம் விசாரணையின் போது விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி கடந்த மே 3ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுதும் மத்திய அரசு காவிரி வரைவுத்திட்டத்தினை தாக்கல் செய்யாமல் கர்நாடக சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மேலும் அவகாசம் கோரி இழுத்தடித்தது.
அதைத்தொடர்ந்து கடந்த 8ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போதும், தமிழக அரசின் கோரிக்கை குறித்தோ, நீதி மன்ற அவமதிப்பு குறித்தோ கருத்து தெரிவிக்காமல், மத்திய அரசு கோரிய கால அவகாசத்தை வழங்கி, வரும் 14ந்தேதிக்கு மீண்டும் விசாரணையை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுக்குறித்து நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கூறியதாவது, கர்நாடக தேர்தல் நாளை மறுநாள் நடக்க விருக்கிறது. அந்த தேர்தல் முடிந்தவுடன், உச்சநீதிமன்றம் உத்தரவின் படி வரும் 14ம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும் என்றும், இனிமேல் அவகாசம் கேட்டக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.