புதுடெல்லி:
பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரர் ராவ் தலைமையிலான அமர்வில் கடந்த 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதாக பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், யார் விடுவிக்க வேண்டும் என்ற சிக்கலில் பேரறிவாளன் ஏன்? சிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர். ஆளுநர் அல்லது குடியரசுத்தலைவரின் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் பேரறிவாளனை விடுதலைச் செய்ய உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் வினவினர். அவரை விடுவிப்பது மட்டும் தான் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான ஒரே தீர்வு என நினைப்பதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், சபாநாயகரைப் போலவே ஒரு விஷயத்தில் செயல்படுவதற்கு ஆளுநருக்கும் கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள், ஏழு பேர் விடுதலைத் தொடர்பான அதிகாரம் அரசிடம் இருக்கிறது என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு எதிராக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், அதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். பேரறிவாளன் விடுவிப்பது தொடர்பான, தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. மேலும் இன்றைய விசாரணையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.