வாடிகன்:
20-ம் நூற்றாண்டு கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் முகமாகக் கருதப்படும் அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாட்டிகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

1910-ஆம் ஆண்டு பிறந்த தெரசா அல்பேனியா நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் இந்தியக் குடியுரிமை பெற்று கத்தோலிக்க துறவியாவார்.
1950ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற தொண்டு அமைப்பை நிறுவி நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், இறக்கும் தருவாயில் இருப்போருக்கும் சேவையாற்றி வந்தார். கொல்கத்தாவின் சேரிகளில் இவர் கால்கள் படாத இடமே இல்லை எனலாம்.
இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொல்கத்தாவில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு புனிதர்பட்டம் வழங்குவது பற்றி வாட்டிகன் பரிசீலித்து வந்தது. அதற்கான உறுதியாக’பியூட்டிஃபைட்” என்கிற அங்கீகாரத்தை கடந்த 2003-ல் அறிவித்திருந்தது.
இதையடுத்து அவருக்கு செப்டம்பர் 4-ம் தேதி அதிகாரபூர்வமாக புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரசா உலகம் முழுவதும் பலராலும் போற்றப்பட்டவராக இருந்தாலும் அவர் சர்ச்சைகளையும் சந்திக்காமல் இல்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் என்பவர் தாம் எழுதிய “நரகத்தின் தேவதை” என்ற நூலில் தெரசாவை மாய்மாலக்காரர் என்று கடுமையாக விமர்ச்சித்திருந்தார்.
விமர்ச்சனங்களை கண்டுகொள்ளாத தெரசா, தன் மீதான விமர்ச்சனங்களுக்கு கிறிஸ்துவின்மீதான விசுவாசம் தன்னை மரணத்தருவாயில் இருக்கும் எளியவர்களுடன் இணைத்திருக்கிறது என்று மட்டும் பதிலளித்திருந்தார்.
Patrikai.com official YouTube Channel