டெல்லி:

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில், குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை யும் மீறி நேற்று இரவு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில்,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மை யினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா  நிறைவேற்றம் என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகும். இதனை ஆதரிப்பவர்கள் ஜனநாயகத்தின்  அடித்தளத்தை தாக்கி அழிக்க முயற்சிக்கின்றனர் என்று கடுமையாக சாடியுள்ளார்.

அதுபோல, ராகுல்காந்தியின்  சகோதரி பிரியங்கா வதேராவும்  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில், தேசத்தின் விடுதலைக்காக நமது முன்னோர்கள் ரத்தம் சிந்தி பாடு பட்டிருக்கின்றனர்.  நமது தேசத்தின் பரந்தமனப்பான்மையை கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறார்கள், இது மக்களின் சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்தை பறிக்கும் செயல்,  வலுவான, ஒன்றுபட்ட இந்தியாவுக்காக தொடர்ந்து போராடுவோம் என சாடி உள்ளார்.