டில்லி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் அரசுக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் நடத்த முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு இடையில் நேற்று மக்களவையில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.  இந்த புதிய சடத்தின்படி வங்கதேச, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியாவில் குடியேறும் இந்துக்கள், கிறித்துவர், சமணர், பௌத்தர், பார்சிகள் உள்ளிட்டோருக்குக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.   ஆகையால் இஸ்லாமியர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு பெருகி வருகிறது.   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியும் மனித நேய ஆர்வலருமான சசிகாந்த் செந்தில் எழுதியுள்ள கடிதத்தில், “மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா (சிஏபி) தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட இந்த நாள் நவீன இந்தியாவின் சரித்திரத்தில் இருண்ட தினம் ஆகும்.    இந்த மசோதாவுக்கு ஆதரவாக நீங்கல் பேசியது சமூக ஒற்றுமை உங்கள் அரசு கொண்டுள்ள வெறுப்பு கருத்தைப் பிரதிபலிக்கிறது.

நாட்டிலுள்ள இஸ்லாமியர் மற்றும் பழங்குடியின சகோதரர்களின் அச்சத்தை போக்குவதற்குப் பதில் அவர்களை மேலும் அச்சுறுத்தி வரும் உங்கள் நடவடிக்கை எனக்கு அவமானமாக உள்ளது. இது மதச்சார்பின்மைக்கு அபாயத்தை விளைவிக்கும் என்னும் அச்சத்தை உண்டாக்குகிறது.   இந்த மதச்சார்பான சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பட்டியல் ஆகியவை பலரை அச்சுறுத்துவதை நீங்கள் உணரவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நேற்று இந்த மசோதா ஒப்புதல் பெறப்பட்டது ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வரும் மக்களின் நம்பிக்கையில் ஒரு ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது. தேசிய குடியுரிமை பட்டியல் என்பது  தென் ஆப்ரிக்காவின் ஆசியப் பதிவு விதி மற்றும் ஜெர்மனியின் மனித உரிமைச் சட்டத்துக்கு எதிரானதாகும்.   இது குறித்து நாங்கள் பலமுறை விடுத்த வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆனதால் நாங்கள் இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்

எனவே நான் மக்கள் அனைவரையும், ”நான் எனது குடியுரிமையை நிரூபிக்கும் எந்த ஒரு ஆவணத்தையும் அளிக்க மாட்டேன்.  அத்துடன் இந்திய அரசு அறிவித்துள்ள தேசிய குடியுரிமைப் பட்டியலுக்கு எதிரான எனது ஒத்துழையாமை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்துவேன். இதற்காக அரசு எடுக்கும் கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.  நான் இந்திய நாட்டின் குடிமகன் இல்லை என நீங்கள் அறிவித்தாலும் நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்” என அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  நான் முதல் ஆளாக இதை அறிவிக்கிறேன்.

எனது உணர்வை புறிந்துக் கொண்டு இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நமது தேசத்தந்தை காட்டிய வழியில் இந்த சத்தியாக்கிரக போரட்டத்தில் ஈடுபடுவார்கள் என நம்புகிறேன்.   ஒரு முன்னாள் அரசு அதிகாரி என்னும் முறையில் இந்த கைது நடவடிக்கைகளை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மக்களைக் கேட்டு கொள்கிறேன்.  வரும் நாட்களில்  அனைத்து மக்களும் ஓரணியில் எதிர்த்து நின்றால் அரசு அதற்குப் பனியும் என நீங்களும் புரிந்துக் கொள்வீர்கள்.  ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.