சென்னை: இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ராஜாவைத் தாலாட்டும் தென்றலாக வரும் செப். 13-ஆம் தேதி பாராட்டு விழாவை நடத்த உள்ளோம். இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல, அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகா்களுக்குமான பாராட்டு விழா என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ளார் இளையராஜா. முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசைநிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில், துணை முதல்வர் உதயநிதி வரவேற்புரையாற்றுகிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையுரையாற்றுகிறார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.