சென்னை:  ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன.,5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து,  இன்று சட்டபேரவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை அமைச்சர் பெரியசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு பேரவையில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட ஊராட்சிகளை ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநர்கள் நிர்வகிக்க உள்ளனர். ஊராட்சி ஒன்றியங்களை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களும் நிர்வகிக்க உள்ளனர்.

இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல, தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனி அதிகாரி நியமன மசோதாவுக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸே எதிர்ப்பு தெரிவித்திருப்பது தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஊரக உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர்.