சென்னை:
நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
தமிழகத்தில் ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற பிறகு, ஊடகங்கள் மீதும், அரசியல் கட்சியினர் மீதும் எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரந்து மிரட்டி வருவது வாடிக்கையாகி வருகிறது.
ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் விஜயகாந்த தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து கோரிய வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டம் தெரிவித்தும்கூட, செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல எதையும் கண்டுக்காமல் இருக்கிறது தமிழக அரசு.
கடந்த 2012ம் ஆண்டு முதல், தமிழக அரசையும், அமைச்சர் களையும் விமர்சித்து நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டதாக கூறி நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது சென்னை பெருநகர மாவட்ட நீதிமன்றத்தில் 18 குற்றவியல் அவதூறு வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. இந்த 18 வழக்குகளின் விசாரணையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் மனு விசாரித்து தீர்ப்பு கூறினார். அப்போது, நக்கீரன் கோபால் மீதான 18 வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தும், விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும், இந்த மனுவிற்கு பெருநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டார்.
+++