கோவை: தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை அதிகாரியை அரவணைத்து நன்றியை வெளிப்படுத்திய குட்டி யானை தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற வள்ளுவனின் குறள்நெறிக்கேற்ப நடந்துகொண்ட குடியானையின் நெகிழ்ச்சி, பார்ப்போரையும் கண்கலங்க வைக்கிறது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சரகத்தில் உள்ள காட்டுப்பகுதியான தங்கம் சுரங்கம் என்ற பகுதியில் உள்ள ஒரு குழியில் குட்டி யானை ஒன்று விழுந்துள்ளது. அதை மீட்க முடியாமல், பெரிய யானைகள் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், குட்டி யானையின் சத்தம் கேட்டு, அங்குவந்த வனத்துறையினர், அதை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிறந்து ஒரு மாதம் ஆன பெண் யானைக்குட்டி யானை, தாயுடன் உலா வந்தபோது, குழிக்குள் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. அந்த குட்டி யானையை மீட்கும் வகையில், அந்த குழியை மேலும் அகலமாக்கி, கால்நடை மருத்துவ குழு உதவியுடன் குழியிலிருந்து மீட்டெடுத்தனர். சோர்வாக காணப்பட்ட குட்டியானைக்கு சிகிக்சையும் அளிக்கப்பட்டது. இதையடுத்து உஷாரான குட்டியானையை, தாய் யானையுடன் சேர்த்து வைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
சுமார் 7 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு, தாய் யானை இருக்கும் இடம் அறிந்து, அதனுடன் குட்டியை யானையை சேர்த்து வைத்தனர். குட்டியை பார்த்தவுடன் தாய் யானை, பாசத்துடன் ஓடிவந்து குட்டி யானையை அழைத்து சென்றது.
முன்னதாக அந்த குட்டி யானை, வனச்சரகரை தனது தும்பிக்கையால் அணைத்து வருடும் புகைப்படம்,மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குட்டியானையின் நெகிழ்ச்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது… ஐந்தறிவு உள்ள ஜீவன்களுக்கும் கருணை, பாசம், நன்றி உண்டு என்பதை இந்த ஒரு மாத யானை குட்டி அழகாக வெளிப்படுத்தி உள்ளது. திருவள்ளுவரின் குறள் நெறியை உறுதிப்படுத்தி உள்ளது.