கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு காவல்துறை நடத்திய 12 மணி நேர ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத் தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மக்களுக்கு சேவையாற்றி வரும் துறைகளான சார்பதிவாளர் அலுவலகமான பதிவுத்துறை அலுவலங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு செயலுக்கும், தனித்தனியாக அமவுண்ட் நிர்ணயம் செய்யப்பட்டு வரி வசூலிப்பதுபோல, லஞ்சம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் காவல்துறைக்கும், அரசுக்கும் பொதுமக்களால் அனுப்பப்பட்டு வருகிறது. இருந்தாலும் கண்துடைப்புக்காகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடுமையாக லஞ்சம் பெறப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த அலுவலகத்தில் சப்ரிஜிஸ்டராக அருணா என்பவர் உள்ளார். இவர் பத்திரப்பதிவு மட்டுமின்றி, நிலம் தொடர்பான எந்தவொரு விவரம் பெற வேண்டுமானால், லஞ்சம் வாங்காமல் செய்வது இல்லை என்றும், அவரின் கீழ் பணியாற்றி வரும் ஊழியர்களும் லஞ்சப்பணத்தில் ஊறி திளைப்பதாகவும், பத்திரப்பதிவில் அதிகளவில் மோசடிகள் நடப்பதாகவும், நில ஆவணங்களில் போலியாக திருத்தங்கள் செய்து பதிவு செய்வதாகவும் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன.
இந்த நிலையில், புகார்கள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில் போலீசார் நேற்று இரவு பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தின் கதவுகளை அடைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உள்ளே இருப்பவர்களை வெளியே செல்லக்கூடாது என கூறி விட்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெளிநபர்கள் உள்ளே வருவதும் தடுக்கப்பட்டது.
இரவு முழுவதும் தொடர்ந்த இந்த சோதனை இன்று அதிகாலை வரை நடைபெற்றது. அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். மேலும் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் சோதனை செய்தனர். இன்று காலை 7.30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையானது நிறைவடைந்தது. சுமார் 12மணி நேரம் இநத் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின்போது, சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற் கான ஆவணங்களை கேட்டு, அலுவலகத்தில் இருந்த சப்ரிஜிஸ்டரிம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், அதற்கான எந்தவொரு ஆவணமும் இல்லாததால், அவர்களால் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து சப்ரிஜிஸ்டர் அருணாவை கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இன்று காலை அவர் ஆஜரானதும், மீண்டும் பணம் தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.