டில்லி:
பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரது அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் அதிகளவில் செலவு செய்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கால்கியா பெற்றுள்ள தகவல்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
அதன் விபரம்…
கடந்த 4 ஆண்டில் ரூ. 4,343.26 கோடி விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. இதில் 2014 முதல் 2015ம் ஆண்டு வரை அச்சு ஊடக விளம்பரத்திற்கு மட்டும் ரூ. 424.85 கோடி, எலக்டரானிக் மீடியாக்களுக்கு ரூ.448.97 கோடி, வெளிப்புற விளம்பரத்திற்கு ரூ.79.72 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2015-16ம் ஆண்டில் ரூ.1,171.11 கோடி, 2016-17ம் ஆண்டில் ரூ.1,263.15 கோடி அரசு சார்பில் செலவிடப்பட்டுள்ளது.
விளம்பர பிரியர் என்று மோடியை எதிர்கட்சிகளும், சமூக வலை தளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டதற்கான பொருள் இந்த புள்ளி விபரங்கள் மூலம் உண்மை என்பது தெரியவந்துள்ளது. 2017-18ம் ஆண்டில் மட்டும் தான் குறைந்த தொகையாக ரூ.955.46 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட ரூ.308 கோடி, அதாவது 25 சதவீதம் குறைவாகும்.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதனால் இந்த ஆண்டு நிச்சயம் விளம்பர செலவு கூடுதலாக தான் இருக்கும். கடந்த 4 ஆண்டுகளில் மோடி தனது விளம்பரத்துக்கு செலவு செய்த தொகையை 10 லட்சம் குழந்தைகளுக்கு 3 ஆண்டு உணவு வழங்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.