டில்லி:

ஏர் இந்தியா உயர் அதிகாரி மீது பெண் சிப்பந்தி பாலியல் புகார் அளித்துள்ளார். இது குறித்து அந்த சிப்பந்தி விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். அதில்,‘‘ நடுநிலையான விசாரணை குழு அமைத்து இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் தனது டுவிட்டரில், ‘‘இந்த பிரச்னையை உடனடியாக எதிர்கொள்ளுமாறு ஏர் இந்தியா சிஎம்டி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மற்றொரு விசாரணைக்கு குழு அமைக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘கடந்த 6 ஆண்டுகளாக அந்த அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். இதர விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்குக்கு ஒப்பானவர் அவர். இல்லை என்றால் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே மீது பல நடிகைகள் குற்றம்சாட்டியதை போன்றவர். அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதர பெண்கள் இருக்கும் போது மோசமான வார்த்தைகளில் என்னை திட்டியுள்ளார். ஆபாச வார்த்தைகளுடன் பேசியுள்ளார்.

அந்த அதிகாரியின் பெயரை அமைச்சரிடம் தான் தெரிவிப்பேன். இது குறித்து ஏர் இந்தியா பெண்கள் பிரிவில் புகார் செய்யப்பட்டது. அந்த மூத்த அதிகாரிக்கு சம்மன் அனுப்பவே 3 மாதங்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால் என்னை அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் இது குறித்து ஏர் இந்தியா சிஎம்டி.க்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.