சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி இன்று நடைபெற சாத்தியமில்லை என்று கூறிய அவர், நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன்  உள்பட பலர் பங்கேற்ற சாலை மறியல் போராட்டம் அண்ணா சாலையில் நடைபெற்றது. தொடர்ந்து பேரணியாக சென்று மெரினாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது புரசைவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்டாலினுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது என்றார். மேலும்  காவிரி பிரச்சினை குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்,  தற்போது நாங்கள் கைது செய்யப்பட்டிருப்பதால், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த இயலாது என்றும், அதன் காரணமாக நாளை காலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும், நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என்ற  ஸ்டாலின், “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தொடர்ந்த மனுவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தற்போதைய ஆட்சி மீது ஆளுநர் எந்த அளவுக்கு அபிப்ராயம் வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்வாறு அவர் கூறினார்.