சென்னை,

ஓகி புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யாமல், ஆளும் அதிமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

ஓபி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. அங்கு நிவாரண பணிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு திமுக வினருக்கு திமு.க.செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒகி புயல் மற்றும் தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இதுவரை 4 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.

குமரி மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து முடிக்காமல், வழக்கம்போல் ஆளும் எடப்பாடி அரசு அலட்சியம் காட்டி வருவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.
இனி அதிமுக அரசை நம்பி இல்லாமல், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணியில் இறங்கி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.