டில்லி,
காவிரி வழக்கை மார்ச் 21ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது உச்சநீதி மன்றம். மார்ச் 21–ந் தேதி முதல் ஏப்ரல் 11–ந் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த 3 வாரங்களில் தீர்ப்பு வெளியிடப்படும் என்றும் உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
காவிரி நீர்பங்கீடு வழக்கு, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 2007–ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த தீர்ப்பில் விளக்கம்கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளும் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
ஆனால், காவிரி நீர் பங்கீடு குறித்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை கர்நாடக அரசு தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று விசாரணைக்கு வந்தது காவிரி வழக்கு. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன், கர்நாடக அரசு வக்கீல் மோகன் கத்தார்க்கி ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணை தொடங்கியதும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள், அவற்றின் மீதான விளக்கங்களை தாக்கல் செய்வதாகவும், அவற்றின் அடிப்படையில் தங்கள் வாதங்களை முன்வைப்பதாகவும் கூறினார்கள்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, பரமசிவம் ஆகியோர், தமிழக அரசு தரப்பிலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர்.
கேரளா அரசு தரப்பில் மூத்த வக்கீல் பிரதீப்குப்தா சில ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பாலி நாரிமன், 1892 மற்றும் 1924–ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட காவிரி நதிநீர் தொடர்பான ஒப்பந்தங்களை கூறி வாதங்களை முன்வைத்தார்.
இதற்கு சேகர் நாப்டே, 1924–ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தம் பற்றி இப்போது பேசுவது ஏட்டுக்கு மட்டுமே உதவும், இப்போதைய சூழ்நிலையில் அவை குறித்து பேசுவது தேவையற்றது என்றார்.
இந்த வழக்கு தொடர்பான உண்மை நிலவரம் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கை அணுக வேண்டும்.
காவிரி நடுவர் மன்றம் கருத்தில் எடுத்துக்கொண்டவைகளின் அடிப்படையிலேயே இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் பாலி நாரிமன், தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்கள் பற்றியும், அவை பயணித்த கால கட்டங்கள் பற்றியும் வாசித்தார்.
இவற்றை கேட்ட நீதிபதி தீபக்மிஸ்ரா, 1892, 1924–ம் ஆண்டுகளில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் இன்றைய சட்டரீதியான நிலை?
இந்த இரு ஒப்பந்தங்களும் இந்திய அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட பிறகும் சட்டரீதியாக நிலைக்க முடியுமா?
கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் தனித்தனியாக உருவான பிறகு பிரிட்டிஷ் காலத்தில் மைசூர் மாகாணம் – சென்னை மாகாணம் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் சட்டரீதியாக பொருந்துமா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த 3 கேள்விகளுக்கும் அடுத்துவரும் வாதங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
1892 ஒப்பந்தத்தை எதிர்த்து ஆந்திர மாநில அரசு கர்நாடகாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை இந்த வழக்கில் இருந்து விடுவித்து தனியாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே தமிழக அரசு தரப்பு மூத்த வக்கீல் சேகர் நாப்டே, பாம்பாற்றுக்கு குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு நீதிபதிகள், அணைகள் கட்டுவது தொடர்பாக எந்த புதிய இடைக்கால மனுக்களையும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா அரசுகள் தாக்கல் செய்யக்கூடாது என்றும், இந்த வழக்கு முடியும்வரை அணைகள் கட்டுவது தொடர்பான எந்த இடைக்கால மனுக்களையும் விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
வழக்கின் மீதான இறுதி விசாரணை மார்ச் 21–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும், ஏப்ரல் 11–ந்தேதி வரை விசாரணை தினசரி அடிப்படையில் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
ஏப்ரல் 11–ந் தேதியில் இருந்து 3 வாரங்களில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.