
சென்னை,
ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 8ந்தேதி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது, போலி வாக்காளர்கள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
ஆர்.கே நகரில் ஏற்கனவே திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக , 45ஆயிரம் போலி வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்ட நிலையில் , மேலும் 5 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம் சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக சார்பில் வாதாடிய வக்கீல் வில்சன், ஆர்.கே நகர் தொகுதியில் மேலும் 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை, அவர்களையும் நீக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி முறையிட்டார்.
அதைத்தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தேர்தல் கமிஷ ுக்கு அதிரடியாக உத்தரவிட்டது. ஒருமுறைக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், அரசியல் கட்சி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேலும், போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், போலி வாக்காளர் குறித்த விபரங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இவ்வளவு போலி வாக்காளர்கள் இருப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல எனவும் கூறினர்.
போலி வாக்காளர்களை நீக்க திமுக எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைப்பதாக கூறி உள்ளது.
[youtube-feed feed=1]