பாடி, மகாராஷ்டிரா

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கிய விஜய் குட்டேவின் தாய் சுதாமதி குட்டே தன்னை குடும்பத்தினர் துன்புறுத்துவதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எழுதப்பட்ட புத்தகமான “தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” தற்போது அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இந்த திரைப்படத்தை விஜய் குட்டே இயக்கி உள்ளார். விஜய் குட்டே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜி எஸ் டியில் ரூ.34 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் போலி பில்கள் மூலம் ஜி எஸ் டி மோசடி செய்துள்ளதாக வழக்கு பதியப்பட்டது.

தற்போது விஜய் குட்டேவின் குடும்பத்தின் மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஜய் குட்டேவின் தாய் சுதாமதி குட்டே கடந்த வெள்ளிக்கிழமை அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாடி என்னும் ஊரில் உள்ள காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அவர் அந்த புகாரில், “என் கணவர் ரத்னாகர் குட்டேவும் அவர் குடும்பத்தினர் 6 பேரும் என் மீது தொடர்ந்து வன்முறை நடத்தி வருகின்றனர். என்னை உடல் அளவிலும் மன அளவிலும் துன்புறுத்துகின்றனர்.

என் பெயரிலுள சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். என் கணவர் ரத்னாகருக்கு குடிப் பழக்கம் உண்டு. குடித்து விட்டு நடன அரங்குகளுக்கு சென்று கூத்தடிப்பதை நான் கண்டித்ததால் என்னை அடித்து துன்புறுத்துகிறார். அவருடைய தீயபழக்கங்களை நான் கண்டிப்பதால் அவர் என்னை வெறுக்கிறார்.” என தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் இயக்குன்ரின் தந்தை ரத்னாகர் மற்றும் அவர் குடும்பத்தினர் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.