திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் மம்முட்டி பெயர் ‘மிஸ்ஸிங்’ ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் கடந்த 8ந்தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்றது.
இன்று 2வது கட்ட தேர்தல் கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த 5 மாவட்டங்களிலும், 451 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 8116 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 12,643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 473 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த தேர்தலில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எர்ணாகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், கேரளாவின் மெகா ஸ்டார் என அழைப்படும் திரையுலக பிரபலமான மம்முட்டியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
நடிகர் மம்முட்டி எர்ணாகுளம் பகுதியில் உள்ள பணம்பிள்ளை நகர் என்ற பகுதியில் வசித்து வருகிறார். பிஸியான படப்பிடிப்பு இருந்தபோதிலும் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வந்தார். ஆனால், தற்போது, அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரால் இன்று வாக்களிக்க முடியவில்லை. இது அவரது கவனத்துக்கு நேற்றுதான் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூறிய உள்ளூர் கட்சித் தலைவர்கள் மம்முட்டி சமீபத்தில் தனது இருப்பிடத்தை கடவந்தராவில் ஒரு புதிய வீட்டிற்கு மாற்றிவிட்டதாகவும், அதனால், பணம்பிள்ளை நகரில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் சில பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரமான காலை 7மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கல்லம்பரா சாவடியில் அமைச்சர் ஏ.சி மொய்தீன் 6.55 மணிக்கே தனது வாக்கை பதிவு செய்ததாக அனில் அக்காரா எம்.எல்.ஏ புகார் அளித்துள்ளார். இது விதி மீறல் என்று அவர் குற்றம் சாட்டினார்.
அதுபோல இடுக்கி மாவட்டம் மற்றும் முண்டக்காயத்தில் உள்ள ஒரு வார்டிலும் காலை 6மணிக்கு வாக்குப்பதிவை தொடங்கியதாக புகார்கள் எழுந்துள்ளன.
காலை 10 மணி நிலவரப்படி 20.45% வாக்குகள் பதிவாகி உள்ளன.
உள்ளாட்சித் தேர்தலின் 3-வது கட்டமாக வாக்குப்பதிவு வரும் 16ந்தேதி அன்று மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.