டெல்லி: 20% பாடங்கள் குறைப்புடன் நீட் 2021 தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சூழலைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா  பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த மார்ச் முதல் அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது மாணாக்கர்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்வதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுபோன்ற சூழலில்,  பொதுத்தேர்வுகள், அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுமா என்று பெற்றோர்களும், மாணாக்கர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து ட்விட்டர் மூலம் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.  அதைத்தொடர்ந்து, வெபினார் மூலம் இன்று  நேரலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துரையாடி வருகிறார்.  அப்போது, கல்வி அமைச்சரிடம் பல மாணாக்கர்ளன்  தங்களின் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

அதில், ஏராளமான மாணவர்கள்,  மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் 2021 ரத்து செய்யப்படுமா  என  கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ”நீட் 2021 தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை. கடந்த நீட் 2020 தேர்வு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டு பின்பு மீண்டும் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் அளித்தோம். எங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். ஆனால் அது மாணவர்கள் மற்றும் தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்” என்று கூறியதுடன், தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என தெரிவித்தார்.

மேலும்,  பாடத்திட்டம் குறைக்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ”இதுகுறித்துத் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். பாடத்திட்டக் குறைப்பின் அடிப்படையில் எத்தனை கேள்விகள், எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது” , குறைந்த பட்சம் 20 சதவிகிதம் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.