2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு அறிவித்தது.
மச்சாடோ, வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சி அரசியலை எதிர்த்து ஜனநாயக இயக்கத்தை அர்ப்பணிப்புடன் செயல்படுத்திவரும் அமைப்பான சுமேட்டின் நிறுவன தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காகவும் நீதித்துறை சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்காக குரல் கொடுத்து வருகிறார்.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்த நோர்வே நோபல் குழுவின் தலைவரான ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ், துணிச்சலான மற்றும் அர்ப்பணிப்புள்ள அமைதிக்கான சாம்பியனுக்கு செல்கிறது – வளர்ந்து வரும் இருளில் ஜனநாயகத்தின் சுடரை எரிய வைக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த பரிசு வழங்கப்படுவது பெருமையாக உள்ளது என்று கூறினார்.

வெனிசுலாவில் ஜனநாயக இயக்கத்தின் தலைவராக, இந்த ஆண்டு அமைதிப் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ, சமீபத்திய காலங்களில் லத்தீன் அமெரிக்காவில் பொதுமக்கள் துணிச்சலுக்கு மிகவும் அசாதாரணமான எடுத்துக்காட்டுகளில் ஒருவர் என்றும் கூறினார்.
மேலும், “ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நேரத்தில், இந்தப் பொதுவான தளத்தைப் பாதுகாப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது.

நீடித்த அமைதிக்கு ஜனநாயகம் முக்கியமானது.
இருப்பினும், ஜனநாயகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள உலகில் நாம் வாழ்கிறோம், அதிகமான சர்வாதிகார ஆட்சிகள் விதிமுறைகளை சவால் செய்து வன்முறையை நாடுகின்றன.
வெனிசுலா ஆட்சியின் அதிகாரத்தின் மீதான கடுமையான பிடிப்பும் மக்கள் மீதான அதன் அடக்குமுறையும் உலகில் தனித்துவமானது அல்ல. உலகம் முழுவதும் அதே போக்குகளை நாம் காண்கிறோம்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் சுதந்திரமான ஊடகங்கள் மௌனமாக்கப்பட்டன, விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், மற்றும் சர்வாதிகார ஆட்சி மற்றும் இராணுவமயமாக்கலை நோக்கித் தள்ளப்பட்டுள்ளதாக” அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டில், முன்பை விட அதிகமான தேர்தல்கள் நடத்தப்பட்டன, ஆனால் அவை குறைந்த அளவே சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்டதாக நோபல் பரிசளிப்புக் குழு தெரிவித்துள்ளது.