சேலம்: 19.33 ஏக்கர் பரந்து விரிந்து, துர்நாற்றத்தை பரப்பி வந்த சேலம் மாவட்டம்  எருமபாளையம் குப்பை கிடங்கு, இன்று பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பசுமை பூங்காவாக மாறி காட்சி அளிக்கிறது. சேலம் மாநகராட்சியின் இந்த அசத்தலான  நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட 44வது வார்டில் கடந்த 75 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த எருமாபாளையம் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அங்கு, மலைபோல் குவிந்த குப்பையால் துர்நாற்றம், நிலத்தடி நீர் மாசு, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உருவாக்கின.

அதைத்தொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு  ரூ.20.45 கோடி மதிப்பில் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கு, நவீன முறையில் சுகாதார பசுமை தளமாக மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு  திடக்கழிவுகள் கொட்டப்படுவது  முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அங்கு குப்பை கொட்டப்பட்டு வந்த குப்பைகள் செட்டிச்சாவடிக்கு மாற்றப்பட்டது .தொடர்ந்து,  எருமபாளையத்தில் உள்ள திடக்கழிவு கிடங்கினை பொது மக்களுக்கு பயனளிக்கும் மாற்றியமைக்க மாநகராட்சி திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், சேலம் ஸ்மார்ட்டியாக அறிவிக்கப்பட்டதால், அதன் அடிப்படையில்,  ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடங்கியது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவில் பேசிய அப்போதைய  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20.45 கோடி மதிப்பில் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கு, நவீன முறையில் சுகாதாரமான பசுமை தளமாக மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.  மொத்தமுள்ள ‘‘19.33 ஏக்கரில் உள்ள திடக்கழிவுகளை 6.70 ஏக்கர் பரப்பிற்கு மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகை எடுக்கப்பட்டு, விஞ்ஞான முறையில் மூடப்பட்டது.

மூடப்பட்ட நிலப்பரப்பு 3 தளங்களாக பிரிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம், புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைமேடை மற்றும் சைக்கிள் ஓட்டும் தளம் அமைக்கப்பட்ட வந்தது.  சுமார் 7 ஏக்கர் பரப்பளவிற்கு, தரைமட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு உபயோகமற்ற பழைய திடக்கழிவுகள் சமன்படுத்தப்பட்டு, கழிவுகள் சரியாத வண்ணம், பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டது.  தொடர்ந்து, 11 மீட்டர் உயரத்திற்கு பழைய திடக்கழிவுகளை சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 12.63 ஏக்கர் நிலப்பரப்பு, மாநகராட்சியின் இதர பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட பணிகள் ஜரூராக நடைபெற்ற வந்தது.

தற்போது எருமபாளையம் குப்பைக்கிடங்கு நவீன பூங்காவாக மாறி காண்போரின் கண்களை கவர்ந்து வருகிறது. அங்கு புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைமேடை, சைக்கிள் ஓட்டும் தளம் உள்ளிட்டவை  அமைக்கப்பட்டு உள்ளது.

சேலம் மக்களை முகம் சுளிக்க வைத்த குப்பை மேடு, இன்று கண்ணை கவரும் வகையில் பசுமை பூங்காவாக மாற்றப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  குப்பை மேட்டை பசுமை பூங்காவாக மாற்றிய சேலம் மாநகராட்சியின் அசத்தலா நடவடிக்கை சமூக ஆர்வலர்களால் பாராட்டப்படுகிறது.