சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும் என்றும், அதுபோல அனைத்து பள்ளிகளும் ஜூன் 1ந்தேதி திறக்கப்படும் என்றும் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை அருகே உள்ள கொடிவேரி அணையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வரும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 1, 6, 9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் மாற்றம் இல்லை. புதிய பாட திட்டத்தில் 185 நாட்கள் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த பாட திட்டங்கள் மூலமாக தமிழக கல்வித் துறையை இந்தியாவே திரும்பி பார்க்கும் என்று கூறினார்.
மேலும், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 4 வகையான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளி, பிளஸ்2 தேர்வில் 100 சதவிகிதம் தோல்வி அடைந்தது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், தேர்வில் தோல்வி காரணம், அங்குள்ள மாணவ மாணவிகள் என்பது போல கருத்து தெரிவித்தார்.
‘அங்கு முழுமையாக தெலுங்கு பேசுபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆகையால் அங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெலுங்கு தெரிந்த, பேசும் ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்று கூறினார்.