அப்பாவியான நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி சிலர், பணம் பறிக்க முயற்சிப்பதாக திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி தாணு. அந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு பெரும் நட்டம் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் விநியோகஸ்தர் செல்வக்குமார் என்பவர், “கபாலி படத்தை வாங்கியதால் எனக்கு ஒன்றரை கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் கபாலி பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. அப்போது அவர், “கபாலி திரைப்படத்தால், தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக செல்வக்குமார் என்பவர் கூறுவது தவறு. அவருக்கும் கபாலி திரைப்படத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.
நடிகர் ரஜினி ஒரு அப்பாவி. கஷ்டம் என்று கேட்டால், ஆள் தெரியாமல் பணத்தைக் கொடுத்துவிடுகிறார். அதனால்தான் அவரிடம் போகிறார்கள்.
என்னிடம் கேட்டால், என்ன கணக்கு என்று கேட்பேன். ரஜினியோ கேட்காமல் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்.
எவ்வளவு பெரிய தவறு இது?
இதனால்தான் ரஜினியை மிரட்டி சிலர் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்” என்று தாணு தெரிவித்தார்.