சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் அரசியலாக்கப்பட்டு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியின் படம், தமிழகஅரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், பாஜகவினர், தமிழகஅரசு ஆங்காங்கே வைத்துள்ள விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால், அந்த படத்தை கிழித்தும், மை பூசி அழித்தும், அலங்கோலமாக மாற்றி மேலும் பதற்றத்தை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஏற்படுத்தி உள்ளனர். இதனால் சில இடங்களில் பரபரப்பு எழுந்துள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. ஆனால், தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு விளம்பரங்களில் பிரதமர் படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில பாஜகவினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர பதாகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை ஒட்டி வருகின்றனர்.
பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பாஜகவினர் ஒட்டினர்.இந்திய பிரதமரின் புகைப்படத்தைக் கூட போடாத நிலையை மாற்றிடவும்,மக்கள் விரோத திமுக அரசுக்கும், திமுக அரசு செய்யும் தவறான செயல்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் தவறை உணர்த்தி திருத்திடும் விதமாக பிரதமரின் புகைப்படத்தை ஒட்டியதாக அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், பாஜகவின் ஒட்டிய பிரதமர் மோடியின் படத்தை கிழித்தும், மை பூசியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அழித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பாஜகவினர் சில பகுதிகளில் குவிந்ததால் சலசலப்பு எழுந்துள்ளது.
மொத்தத்தில் இந்திய வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை, அரசியல் களமாக்கி, திமுக அரசும், பாஜகவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவதும், படங்களை ஒட்டுவதும், அதன்மேல் மை பூசி அழித்து, அந்த விளம்பர பதாதைகளை அசிங்கப்படுத்தி இருப்பதும், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற அநாகரிக நடவடிக்கைகளை தடுக்க வேண்டிய காவல்துறையினர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை… பல விஷயங்களில் காவல்துறையினரின் நடவடிக்கை கேள்விக்குறியாகவே உள்ளது.