சென்னை,
தீபாவளியன்று வெளியான நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தின் வெற்றிக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தில், பெற்ற ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, மருத்துவர்கள் போன்ற காட்சி குறித்து தமிழக பா.ஜ.க.வினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த காட்சிகள் உடனே நீக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ. தேசிய செயலாளர் எச்.ராஜா,, பாஜ தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பலர் படத்தில் இருந்து ஜிஎஸ்டி காட்சிகளை நீக்க வேண்டும் என மிரட்டல் விடுத்து வந்தனர்.
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரை உலகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மெர்சல் படத்துக்கும் மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக எதிர்பார்க்காத வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய், இந்த அளவிற்கு மாபெரும் வெற்றி பெற உதவிய அனைத்து நல்ல உள்ளத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாரட்டுக்களுடன், நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றி அடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச்சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபல மான அரசியல் தலைவர்கள் மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் ( ரசிகர்க, ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படகுழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.
மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும் , ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் விஜய் என குறிப்பிட்டு உள்ளார்.
தற்போது விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் எப்போதும் போல ஜோசப் விஜய் என்ற லெட்டர் பேடிலேயே அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.