சென்னை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தேடல் குழுவில், ஆளுநர் பிரதிநிதி, யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம், யுஜிசி விதிமுறைகளின்படி, பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவுசெய்வார் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாநில ஆளுநரால் பரிந்துரைக்கப்படுபவர் தலைவராகவும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பர். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைக்கொண்டு, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் உள்ள பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரே இருக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இநத் நிலையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வாசுகி தலைமையில் 5 பேர் அடங்கிய தேடுதல் குழுவை அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேடல் குழுவில், அரசு தரப்பில் குழு தலைவர், உறுப்பினர், சிண்டிகேட் மற்றும் செனட் சார்பில் 3 பேர் என ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்முறையாக ஆளுநர் தரப்பு மற்றும் யுஜிசி தரப்பில் பிரதிநிதி யாரும் இடம்பெறாமல் தேடுதல் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.