சென்னை

னிதாவின் தற்கொலை குறித்து வாய் மூடி மவுனியாக இருந்த பா ஜ க தலைவர் தமிழிசை தற்போது அது ஒரு அரசியல் சதித்திட்டம் என குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் சேர இயலாமல் போனதைத் தொடர்ந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.  அந்த மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது.  பல அரசியல் தலைவர்களும் அந்த மரணத்துக்கு தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.  ஆனால் இது குறித்து ஏதும் சொல்லாமல் இருந்த பா ஜ க தலைவர்கள் இப்போது கருத்துச் சொல்ல துவங்கி உள்ளனர்.

முன்னதாக எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ”விவசாயத்துறையில் பயின்று விவசாயிகளுக்கு உதவுவேன் என வெளிப்படையாக தெரிவித்த அந்தப் பெண் எவ்வாறு தற்கொலை செய்துக் கொள்வார்?  அவர் சாவை வைத்து ஸ்டாலின் விளையாடுகிறாரா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.  இன்னொரு பதிவில், வேலூரை சேர்ந்த ஒரு நீட் மாணவரின் தாயார் தற்கொலை செய்துக் கொண்டபோது எதற்காக போராட்டம் எதுவும் நடைபெறவில்லை எனவும் வினவி உள்ளார்.  இது பா ஜ க மீதான நியாயமற்ற தரக்குறைவான தாக்குதல் என பதிந்திருந்தார்.  ஒரு காலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்த மாணவரைக் கொன்றவர்கள் தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக பதிந்துள்ளார்.  தனது பதிவில், “நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானது அல்ல.   மாநில கல்வி திட்டத்தில் பயின்றவர்கள் 63% தேர்வு பெற்றுள்ளனர்.  சென்ற வருடங்களை விட அதிகமாக கிராமப்புற மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களும் தேர்வு பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.  மற்றொரு பதிவில், ”அனிதாவின் தற்கொலை பா ஜ க வுக்கு எதிரான அரசியல் சதியாகும்.  மோடி எதிர்ப்பாளர்களின் நாகரிகமற்ற போக்குக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.   எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்” எனவும், ”இறந்த மாணவியுடன் தாங்கள் எடுத்துக் கொண்டதாக புகைப்படம் பதியும் திமுக முன்னாள் மந்திரிகள், அவருக்கு தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்” எனவும் பதிந்துள்ளார்.

தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது அனிதாவின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றும், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க தாம் கடைசிவரை முயன்றும் முடியாமல் போனது எனவும் தெரிவித்தார்.

பா ஜ க தலைவர்களின் இந்த பதிவுகள் தி மு க வினரை மேலும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.  நீட் தேர்வு இல்லாமலே இது வரை ஆயிரக்கணக்கில் மருத்துவர்களை உருவாக்கிய மாநிலத்துக்கு நுழைவுத் தேர்வு என்பதே தேவை இல்லை என திமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.