
ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று அவரை தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்.பிக்கள்சந்தித்து கோரிக்கைவிடுத்தனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம் அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா துணை சபாநாயகுரமான தம்பிதுரை பேசினார்.
அப்போது அவர், “அதிமுகவினர், அண்ணா வழிகாட்டுதலில் உறுதியாக நடக்கிறோம். தமிழ் மொழி பாதுகாப்பு, தமிழ் மொழி உணர்வு நிலைத்திருக்க வேண்டும். தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் போன்ற கொள்கைகளை எங்களுக்கு கற்று தந்தவர் அண்ணா. தமிழர்கள் நலனை பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுகதான். ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக ஜெயலலிதா ஒவ்வொருமுறையும் மத்திய அரசை அணுகினார். அவசர சட்டம் கொண்டுவர கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையில், இன்று அவரது அரசு வெற்றி பெற்றுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை மத்திய அரசே கொண்டு வந்திருக்கலாம். ஆகவேதான் நாங்கள் காத்திருந்தோம். ஜெயலலிதா முன்பு பலமுறை மத்திய அரசை அணுகி தீர்வுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் காங்-திமுக இணைந்த மத்திய அரசு கூட்டணி எதுவும் செய்யவில்லை. பாஜக அரசும் உடனடியாக தீர்வு காண ஒத்துழைக்கவில்லை. ஆகவே, புரட்சி தலைவி அரசே நேரடியாக தலையிட்டு தற்போது தீர்வு கொண்டுவருகிறோம்.
அனைத்து மாநில உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து பிராந்திய மக்களின் கலாசாரம் காக்கப்பட வேண்டும் என்பதே கூட்டாட்சி தத்துவம். இதில், மத்திய அரசு தவறினால் என்ன நடக்கும் என்பதற்கு தற்போதைய தமிழகமே சாட்சி. மத்திய அரசு இதை புரிந்து கொண்டு தீர்வு காண வேண்டும்.
இந்தியாவில் தமிழகம் இருந்தாலும் ஒரே கலாசாரம், ஒரே மொழியை புகுத்தினால் நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை தமிழகம் இப்போது காட்டியுள்ளது. இந்த மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
2011ல் காளையை காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் சேர்த்துவிட்டனர். இதுதான் தமிழகத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணம். ஆனால் இன்று போராட்டம் நடத்துவதாக அலைவதும் அதே திமுகவினரே. இதனால்தான் மக்கள் கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு போராடுகிறார்கள். நாம் ஆட்சியில் இருக்கும்போது ஏதாவது செய்தால்தான் மக்கள் நம்மை நம்புவார்கள். திமுக செய்த தவறால் பிற கட்சிகளுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுவிடும் போல இருக்கிறது
எனவேதான் அதிமுக இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என சின்னம்மா (சசிகலா) பணித்தார். அதையேற்று முதல்வர் இங்கு வந்து பிரதமர் மோடியிடம் அவசர சட்டம் கொண்டுவர வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மோடி அதை செய்யவில்லை. அதேநேரம் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்து அதை நிறைவேற்ற மத்திய அரசு உதவியுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
தமிழக கலாசாரத்தை காப்போம் என மோடி கூறியுள்ளார். அதை வரவேற்கிறோம். அப்படியானால், கட்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையிலும் தமிழகத்திற்கு ஆதரவாக மோடி தீர்வு காண வேண்டும். தமிழகத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி மோடியை சந்திக்க கோரிக்கைவிடுத்தோம். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பிரதமரை சந்திக்க முடியாமல் இருக்கிறோம். இப்போதும் மோடியை சந்திக்க மூன்று நாட்களாக காத்திருந்தோம். ஆனால் நேரம் தரப்படவில்லை.
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். மோடியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆகவே எல்லோரும் சமம்தான். எங்களுக்கு சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற கனத்த இதையத்தோடுதான் இப்போது தமிழகம் செல்கிறோம்.
காவிரி, மீனவர் பிரச்சினை, கட்சத்தீவு என எதற்கும் அவரை சந்திக்க முடியவில்லை. இருப்பினும் அவசர சட்டம் நிறைவேற்ற பிரதமர் உதவி செய்ததற்கு நன்றி” என்று தம்பிதுரை பேசினார்.
தம்பிதுரை பேச்சில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருந்தன. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை அதீதமாக புகழ்ந்தார். இந்த இரண்டு விசயங்களில்தான் கவனமாக இருந்தார்.
முதல்வர் என்று பன்னீர்செல்வத்தை குறிப்பிடும்போது அவரது பெயரை தவிர்த்தார்.
ஆக, “ஓ.பி.எஸை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது. அதை சசிகலா குடும்பம் விரும்பவில்லை” என்று பேசப்படுவதற்கு அச்சாரமாக இருந்தது, சசிகலாவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்ட தம்பிதுரையின் பேச்சு.
[youtube-feed feed=1]