சென்னை:

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அவசரம் காட்டி வருகின்றன.

அதிமுகவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் ஏற்கனவே விருப்பமனுக்கள் பெறப்பட்ட நிலையில், இன்று வேட்பாளர் நேர் காணல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கரூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த  தம்பிதுரை, இன்று நடைபெற்று வரும் நேர்காணலில் பங்கேற்கவில்லை… இது அதிமுகவில் அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக பாஜகவையும், மோடியையும்  கடுமையாக விமர்சித்து வந்தார் அதிமுக எம்.பி. தம்பித்துரை. அது அவரது சொந்த கருத்து அதிமுக தலைமை கூறியவது. இந்த நிலையில்,  பாஜக அதிமுக கூட்டணி ஏற்பட்டதும் அமைதியானார். இதற்கிடையில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அப்போது, அதிமுக தரப்பில் இருந்து தம்பித்துரை மட்டுமல்லாது, தமிழக சுகாதாரத்துரை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையும், கரூர் தொகுதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதே வேளையில், கரூரில் பிரபலமாக இருந்து வரும், முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளருமான  செந்தில் பாலாஜியும் கரூர் தொகுதியில் போட்டியிட திமுகவில் மனு செய்துள்ளார். அவருக்கு கரூர் தொகுதியை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக விரக்தி அடைந்துள்ள தம்பித்துரை, இன்றைய நேர்காணலுக்கு வராமல் புறக்கணித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது  பரபரப்பை ஏற்படுத்தியது. தம்பித்துரை, கரூரில் போட்டியிட்டால்  வெற்றி பெறுவது கடினம் என்று நினைத்து வேறு தொகுதிகளையும் குறி வைத்துள்ளதாகவும், கிருஷ்ணகிரி தொகுதியை அவர் கேட்கலாம் என்றும் சில தகவல்கள் பரவி வருகின்றன.

இருந்தாலும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பித்துரை, நேர்காணலை புறக்கணித்து உள்ளது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சசிகலாவின் விசுவாசியான தம்பிதுரை,  அதிமுக பாஜக கூட்டணியை விரும்ப வில்லை என்று சொல்லப்படுகிறது. அதேவேளையில், தம்பித்துரையின் மோடிக்கு எதிரான பேச்சை, திமுகவும் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.