ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.

இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை . விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தலைவி படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியாகாமல் தள்ளிப் போனது.

சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரான தலைவி, திரையரங்கில் வெளியானால் மட்டுமே அந்த வசூலை பெறும் என்பதால் திரையரங்கு வெளியீட்டில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். செப்டம்பர் 10-ம் தேதி தலைவி திரையரங்குகளில் வெளியாகிறது.

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு தலைவியின் இந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் பதிப்புகள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும்.

இதையொட்டி கங்கனா ரனாவத் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உருக்கமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.