சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரக்கோணம் – திருத்தணி இடையே இன்றுமுதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது.
தை பூசத்தன்று முருகன் தரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என அழைக்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பிரமாண்டமான பூஜைகள் மற்றும் தேரோட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். தமிழ்நாட்டில் அறுபடை முருகன் கோவில்களில் தைப்பூசம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள், பாத யாத்தை சென்றுகொண்டிக்கின்றனர்.
இதை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணம் – திருத்தணி இடையே இன்று(4-ம் தேதி) முதல் 6-ம் தேதி வரை இந்த சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன.
அரக்கோணத்தில் இருந்து காலை 10.23, பகல் 1 மற்றும் பிற்பகல் 2.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், திருத்தணியில் இருந்து காலை 11.15, பகல் 1.50 மற்றும் பிற்பகல் 3.40 மணிக்கு இயக்கப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.