ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர், மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். அதபோல, காவிரி, கொள்ளிடம் கரைகளிலும், ஸ்ரீரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து நீராடி வருகின்றனர்.
தை அமாவாசை நாளான இன்று (சனிக்கிழமை) மறைந்த தங்களது முன்னோர்களுக்கு, மக்கள் கடற்கரைகள், புன்னியஸ்தலங்கள் மற்றும் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மறைந்த முன்னோர்களை வழிபட அமாவாசை தினம் சிறப்பானதாகம். அதிலும், புரட்டாசி மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் திதி, தர்ப்பணம் செய்வது மிகவும் சிற்தநதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ராமபிரான் நிதி கொடுத்த ராமேஸ்வரத்தில் நிதி கொடுத்து, அங்குள்ள அக்னிதீர்த்த கடலிலில் நீராடிவிட்டு, கோவிலுக்குள் உள்ள தீர்த்தங்களிலும் நீராடுவது மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது.
இதன்படி, தை அமாவாசை நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஸ்தலங்களில் உள்ள நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ள நிலையில், அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி தர்ப்பண பூஜை செய்து வருகின்றனர். தொடர்ந்து, கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சியில் காவிரிக்கரையான அம்மா மண்டபம், கருட மண்டபம் உள்ளிட்ட படித்துறைகளிலும், கொள்ளிட ஆற்றங்கரைகளில் உள்ள படித்துறைகளிலும் ஏராளமான பொது மக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்தனர்.
காவிரியாற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடியதால், பெரும்பாலோனோர் ஆற்றுக்குள் இறங்கி மணல் திட்டுகளில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து, பிண்டங்களைத் தண்ணீரில் கரைத்துவிட்டு, புனித நீராடிவிட்டு கோயில்களுக்குப் புறப்பட்டனர். மேலும், படித்துறைகளில் காத்திருந்த ஏழை, எளியோருக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் காணிக்கைகளை வழங்கினர்.
தை அமாவாசையையொட்டி, அம்மா மண்டபம் உள்பட காவிரி படித்துறை பகுதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்மா மண்டபத்தில் சேரும் வாழை இலை, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர். தீயணைப்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்துவிட்டு புறப்படும் முன்பு ஏழை, எளியோருக்கு அன்னதானம் அளித்துச் செல்வது வழக்கம். இதன்படி, அம்மா மண்டபம் பகுதியில் அமர்ந்திருந்த ஆதரவற்றவர்களுக்குப் பலரும் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
கம்பரசம்பேட்டை, முக்கொம்பு, காந்திபுரம், குடமுருட்டி, யாத்ரி நிவாஸ் உள்ளிட்ட மாவட்டத்தில் காவிரிக்கரை மற்றும் கொள்ளிடக் கரைகளில் உள்ள அனைத்து படித்துறை களிலும், பாசனக் கால்வாய் படித்துறைப் பகுதிகளிலும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாலையே நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதன் காரணமாக காவிரி, கொள்ளிடக் கரைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.