சென்னை,
மிழகத்தில் நடைபெறும் டெட் (TET) தேர்வு குறித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட் தேர்வு), அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்க தமிழக அரசின் சார்பில் அரசாணை எண் 25 வெளி யிடப்பட்டது.  அதேபோல் அரசாணை எண்  71-ன் படி ‘வெயிட்டேஜ்’ முறையும் ஆசிரியர் பணி நியமனத்தின் போது கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தகுதி தேர்வில் மதிப்பெண் விலக்கு என்பது எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க முடியும் என்று விதிகள் இருக்கும் நிலையில், அனைவருக்கும் மதிப்பெண் விலக்கு வழங்குவது சரியல்ல என்றும்,
‘வெயிட்டேஜ்’ முறை பின்பற்றப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர் படிப்பை முடித்த வர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
tet-exam
இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி,  அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.
ஒரே வழக்கில்,  இரு கோர்ட்டுகளின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் உருவானது.
சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு குழப்பத்தை தருவதாகவும், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு,  நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த அக்டோபர் 25-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை  தள்ளி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து,  இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சத விகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்படும் என்பதும், அதே போன்று, வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது