சென்னை: ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப, மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்க  ஆசிரியர்களும் தங்களது கல்வித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களும் டெட் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்களது கல்வித்தகுதியை  மேம்படுத்தாமல்,  அதிக சம்பளம் பெறும் நோக்கத்தில் மட்டுமே தொலைதூர கல்வி நிறுவனங்களில் உயர்படிப்புக் கான டிகிரிகளை பெற்றுக்கொண்டு அதன்மூலம் இன்சென்டிவ் பெற்றுக்கொண்டு, அதிக சம்பளத்தில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி  வருகின்றனர். இவர்களில் பலருக்கு தற்போதைய பாடங்கள் குறித்த முறையான அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையே உள்ளது. ஆனால்,  இவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதே வேளையில் தனியார் பள்ளிகளில் ரூ.25ஆயிரம் சம்பளம் பெறும் ஆசிரியர்களே, அன்றுமுதல் இன்றுவரை அனைத்தையும் விரல்நுனியில் வைத்துள்ளார்கள். இதனால்தான் பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் சிறந்தவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கில் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, தமிழக கல்வி அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி,  எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது என்று தெரிவித்துள்ளார்.

 திருச்சி கே.கே.நகரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்து பள்ளியில் சேரும் மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு புத்தகம், பேனாக்களை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அன்பில் மகேஷ் பொய்யாமொழி , “தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என நீதிமன்ற தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் விபரம் முழுமையாக கிடைத்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் இது குறித்து மேல்முறையீடு செய்யப்படும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பேச்சு அரசியல் கண்ணோட்டமாகவே பார்க்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, ஆசிரியர்கள் தங்களது திறனை மேம்பபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால் அவர்களுக்கும் தேர்வு வைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டும். மற்ற  அரசு துறை  பணிகளில் பதவி உயர்வு பெற துறைவாரியாக தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், ஆசிரியர்களுக்கும்  5ஆண்டுகளுக்கு ஒருமுறை திறனறிவு தேர்வு நடத்தி, அவர்கள் மாணவர்களுக்கு கல்வி போதிக்க தகுதியானவர்கள்தானா என்பதை சோதிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு, வாக்கு வங்கியை மனதில் கொண்டு, எதிர்கால சந்ததியினரின் வாழ்வை கேள்விக்குறியாக்கி விடக்கூடாது. 

தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டியாக அரசு பள்ளி மாணவ மாணவிகளும்  தங்களது தகுதியை உயர்த்திக்கொள்ள  அரசு பள்ளி ஆசிரியர்களும் தகுதி தேர்வை எதிர்கொள்ள வேண்டியதும் அவசியம்.

‘டெட்’ கட்டாயம்: ஆசிரியர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டெட் தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி