ஒரு சி.பி. ஐ. அதிகாரி, தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் போலி சாட்சியங்களைப் பயன்படுத்தி வந்துள்ளதை தில்லி நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
ராம் கிஷன் சர்மா எனும் காவல் அதிகாரி ஒரு நீதிமன்றத்தில் கடமை ஆற்றி வந்தார். தில்லி கஷ்மிரிபாக் பகுதியைச் சேர்ந்த பவன் குமார் என்பவரிடம், அவர் மீதுள்ள புகாரினை தீர்த்து வைப்பதற்காக ₹ 25,000 லஞ்சமாகக் கேட்டதாகச் சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தார். எனவே ராம்கிஷன் சர்மாவை கையும் களவுமாக பிடிக்கத் திட்டமிட்டு, இந்திய உலோகம் மற்றும் தாதுக்கள் டிரேடிங் கார்ப்பரேஷனில் (எம்எம்டிசி) வேலை பார்க்கும், மான் சிங் என்பவர்மூலம் பொறிவைத்து லஞ்சம் வாங்கும்போது கைது செய்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகின்றது.
ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சி.பி. ஐ. யிடமிருந்து பெறப்பட்ட தகவல்மூலம், மான் சிங், சி. பி. ஐ. யின் நிரந்தர சாட்சி என்பதும், அவரை 27 வழக்குகளுக்குச் சி. பி. ஐ. பயன்படுத்தியது அம்பலப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் மான் சிங் சம்பவ இடத்திலேயே இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தில்லி நீதிமன்றம், சி.பி. ஐ. யின் நேர்மை, நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, ஒரு காவல் அதிகாரியைப் பொய்சாட்சி கொண்டு ஊழல் வழக்கில் சிக்க வைத்தமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பரில், சி.பி.ஐ. ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சில புலனாய்வாளர்கள் பல்வேறு வழக்குகளில், குறிப்பிட சாட்சிகளையே மீண்டும் மீண்டும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
“ஒரு சம்பவம் நிகழும் போது, ஒரு சாட்சி ஏற்பாடு செய்யப்படுகின்றது. சில அதிகாரிகள், அவர்கள் எந்த ஊருக்கு மாற்றல் ஆகிப் போனாலும், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட நபர்களையே சாட்சியாகச் சேர்க்கின்றனர். இது மிகவும் சந்தேகத்தை உண்டு பண்ணுவதாகப் பேசியிருந்தார்.
பிரதமரின் கூற்று உண்மை என்பதையே நீதிமன்றத்தின் கேள்வி வெளிச்சப் படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறை தானே வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு, போராட்டக்காரர் கலவரம் செய்வதாக வழக்கு ஜோடிப்பதை போல, சி. பி. ஐ.யும் வழக்குகளை ஜோடிப்பது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாய் உள்ளது.