நெல்லை:  சமீபத்தில் அறநிலையத்துறையினரால் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த  தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தில் இருந்த  சிமெண்ட் கலசம் உடைந்து விழுந்தது பக்தர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த சிமெண்ட் கலசம் பெயர்ந்து விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் முறையாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாத நிலையில்  அவசரம் அவசரமாக இந்து அறநிலையத்துறையினரால் கும்பாபிஷேக விழா   நடத்தப்பட்டது.

வடக்கே காசி தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்றாக உள்ள தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு  மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 07 அன்று  காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சில மாதங்களாக  கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், புனரமைப்பு பணிகள்  முறையாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அமைச்சர் சேகர்பாபு அதை மறுத்து வந்ததுடன், அவசரம் அவசரமாக கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக ஏப்ரல்  த 3ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான ஏப்ரல் 7ந்தேதி அன்று  அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 5 மணிக்கு விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடைபெற்றது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில், புனரமைக்கப்பட்ட கோபுரத்தில் இருந்து சிமென்ட் கலசம் ஒன்று உடைந்து கீழே விழுந்த சம்பவம் பக்தர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோபுரம் கீழே விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிக்கப்பட்டது.

கோவிலில் முறையாக பராமரிப்பு பணி செய்யாமல் கும்பாபிஷேகம் நடத்தியதுடன் கோவிலின் பல பகுதிகளில் இன்னும் பாழடைந்தே காணப்படுவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும், அதை காதில்போட்டுக்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வருவது இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள பக்தர்கள்,   கோவிலில் முறையாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததே இது போன்ற நிகழ்வுக்குக் காரணம் எனவும் ,  இதுபோல மேலும் பல சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால், அரசு  உடனே கோவிலில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.