புதுடெல்லி:

ரூ. 90 ஆயிரம் கோடி இலக்கை எட்டும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்க,  உலகளாவிய ஆலோசனை சேவை மையங்களிடம் இருந்து மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது.

1999 -ம் ஆண்டில் அரசு பங்குகளை விற்பனை செய்வதற்காக தனித்துறை தொடங்கப்பட்டது.

2004-ம் ஆண்டு நிதியமைச்சகத்தின் ஓர் அங்கமாக இந்த துறை உருவானது. அரசு பங்குகள் விற்பனை துறையாக இருந்து 2016-ம் ஆண்டில் முதலீடு மற்றும் பொது சொத்து துறையாக மாற்றப்பட்டது.

2017-18 நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலமாக ஒரு லட்சம் கோடிக்கு மேல்  திரட்டியது. சென்ற நிதி ஆண்டில் ரூ 80 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் பங்குகள் விற்பனை  இலக்கை தாண்டி ரூ 85 ஆயிரம் கோடியை எட்டியது.

2019-20 -ம் ஆண்டில் அரசு பங்குகள் விற்பனை இலக்கு ரூ 90 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வந்துள்ள நிலையில் ஜூலை 5 ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

அதில் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை இலக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிர்ணயித்த இலக்கை எட்டும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களின் அசையா சொத்துகள் மற்றும் முக்கியமில்லாத சொத்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக உலகளாவிய ஆலோசனை சேவை நிறுவனத்தை தேர்வு செய்யும்  முறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தகுதியான நிறுவனங்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பிக்க ஜூலை 1-ம் தேதி கடைசி நாளாகும்.