சென்னை; முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது,  2018ம் ஆண்டில்  நெடுஞ்சாலை தொடர்பாக டெண்டர் விடப்பட்டது. அதன்படி, ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1,515 கோடியாக உயர்த்தப்பட்டு டெண்டர் வழங்கப்பட்டதாகவும், நெடுஞ்சாலை டெண்டரில் ரூ. 4800 கோடி டெண்டர் முறைகேடு  நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். இதே போல அறப்போர் இயக்கமும் புகார் கூறியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நிதிமன்றம், கடந்த 2018ம் ஆண்டு  சிபிஐ விசாரணைக்கு மாற்றி  உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம்  இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று   தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில்  சி.பி.ஐ. விசாரணை உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு, சென்னை உயர்நீதிமன்றமே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

 இந்த நிலையில், வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது, இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என எடப்பாடி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது  என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  ஆனால், அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எடப்பாடி கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான விசாரணையை தொடங்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…