சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ‘அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 2,134 புதிய பஸ்கள் வாங்க, ‘டெண்டர்’ வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், தினமும் இயக்கப்படும் 18,728 பஸ்களில், 1.76 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் நவின வசதிகளுடன் கூடிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்கி வருகிறது. மேலும், பழைய பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. மிகவும் பழுதான பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்து அகற்றி விட்டு புதிய பஸ்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மேலும் 2,134 புதிய பஸ்கள் வாங்க, அரசு போக்குவரத்து கழகம் ‘டெண்டர்’ வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த நிதியாண்டில், 1,535.89 கோடி ரூபாய் ஒதுக்கி, 3,000 புதிய பஸ்கள் வாங்க உத்தரவிட்டதில், 1,210 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன. இந்த நிலையில், தற்போது, 2,134 புதிய பஸ்கள் வாங்க டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த டெண்டரின்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 557 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 110, விழுப்புரம் – 340, சேலம் – 145, கும்பகோணம் – 361, மதுரை – 341, திருநெல்வேலி – 129, கோவை – 151 என, புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய பஸ்கள் தயாரிப்பதற்கான நிறுவனம், விரைவில் தேர்வு செய்யப்படும். ஒப்பந்த ஆணை வழங்கிய ஆறு மாதங்களில், புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், தற்போது வாங்கும் புதிய பஸ்கள் செயல்பாட்டுக்கு வந்ததும், 10 ஆண்டுகளை கடந்து ஓடும் பழைய பஸ்கள் நீக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.