சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கோயம்பேடு மொத்த மார்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு செய்தது தொடர்பான டெண்டரில் மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு வழக்கில், அப்போது துறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ்-சும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2019ம் ஆண்டு கடைகள் ஒதுக்கீடு டெண்டர் நடைபெற்றது. இந்த டெண்டரில் மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அப்போது, இந்த துறையின் அமைச்சராக துணைமுதல்வராக ஓபிஎஸ் இருந்தார். துணை முதல்வரான ஓபிஎஸ்-ன் கீழ் நிதி, வீட்டுவசதி, கிராமப்புற வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை அகற்றும் வாரியம் மற்றும் விடுதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் ஆகிய துறைகள் இருந்தது.
இந்த நிலையில், ஓபிஎஸ் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த சிஎம்டிஏ மீது கோயம்பேடு கடைகள் ஒதுக்கீடு டெண்டர் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு உணவகம் வைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை 11 சிறிய கடைகளாக பதிவு செய்து ஒதுக்கி இருப்பதாகவும், இதனால் தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.86 லட்சம் இழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அப்போது சி.எம்.டி.ஏ. கண்காணிப்பு பொறியாளராக இருந்த ஸ்ரீனிவாச ராவ் உள்பட இருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில், அப்போதைய துறை அமைச்சர் ஒபிஸ்-க்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.