கவுகாத்தி:

அசாம் மாநிலம் பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் நின்று செல்பி எடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தி மற்றும் சராய்காட் இடையே பிரம்மபுத்ரா நதி ஓடுகிறது. இந்த 2 நகரங்களையும் இணைக்கும் வகையில் 1962ம் ஆண்டில் ஒரு பாலம் கட்டப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் கடந்தாண்டு மேலும் ஒரு பாலம் புதிதாக கட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த பாலங்களில் பலர் நடு வழியில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து பாலத்தில் வாகனத்தை நிறுத்தி செல்பி எடுத்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று காம்ரூப் பெருநகரம் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. 2 பாலங்களிலும் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.