ஷில்லாங்:

மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத எலிப்பொறி சுரங்கத்தில் சிக்கியவர்களின் உடல்கள்  சிதைந்துள்ளதால், சுரங்க மீட்புபணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

டந்த டிசம்பர் மாதம் மேகாலயா பெய்த கனமழை காரணமாக,  மாநிலத்தில் கிழக்கு ஜெயின்தியா மலைகளில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்க பொந்துகளில் பணியாற்றிய 15 பேர் வெள்ள நீரில் சிக்கினர்.

அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் நிலவிய நிலையில் அவர்கள் இறந்திருக்கலாம் என கூறப் பட்டது. இந்த நிலையில் தற்போது  அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கத்தில் இருக்கும் உடல்களை மீட்கும் போதே உடல்களின் பாகங்கள் உடைந்து விழுவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில்தான்  ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதில், குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள். இதுவரை ஒருவர் கூட அங்கிருந்து மீட்கப்படவில்லை.

தற்போது கடற்படையினரின் உதவியுடன் அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.இந்திய கடற்படையின்  சிறிய ரோபோட் மோட்டார் வாகனம் (Underwater Remotely Operated Vehicle) மூலம் இவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க முயற்சித்தபோது, இறந்தவரின் உடல் பாகங்கள் உடைந்து சிதைந்து இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களின் உறவினர்கள், எங்களுக்கு, எங்களது உறவினர்களின் உடல்களின் பாகங்களையும் மீட்டு தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நாங்கள் இறுதி சடங்கு செய்யவாவது எங்களுக்கு இறந்தவர்களின் உடல் பாகங்கள் அல்லது அவர்களின் விரல்கள், கால், கைகள் எதையாவது  மீட்டு கொடுங்கள் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்களின் உடல்கள் சுரங்கத்திற்குள் சிக்கி இருப்பதால், அவைகள் சிதைந்து இருப்பதாகவும், உடல்களை மீட்க கடினம் என்றும் மீட்பு படையினர் தெரிவித்து வருகின்றனர்.  இறந்தவர்களின் உடல்களை  210 அடியில் இருந்து 160 அடிக்கு கொண்டு வருவதற்குள் பல பாகங்கள் உடைந்து விழுந்துவிடுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், தற்போதைய நிலை குறித்து உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்படும் என மேகாலாய அரசு தெரிவித்து உள்ளது.

தற்போது உடல்களை மீட்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.