வாரணாசி

சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் நிலையங்களில் மண் குவளைகள் பயன்பாடு வர உள்ளதால் அதன் அறிமுகம் வாரணாசி ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

வட இந்தியாவில் காசி உள்ளிட்ட பல இடங்களில் தேநீர் கடைகளில் மண்குவளைகள் தேநீர் அருந்த பயன்படுத்தப் படுகின்றன.   முன்னாள் ரெயில்வேத்துறை அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் காபி மற்றும் தேநீர் அருந்த மண் குவளைகளை அறிமுகம் செய்தார்.  ஆனால் அது மாறி பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகள் அந்த இடத்தை பிடித்தன.

தற்போது மீண்டும் அதே முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  இது குறித்து ரெயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் செய்யப்படும் கோப்பைகளுக்கு பதிலாக இனி மண் குவளைகள் பயன் படுத்த வேண்டும்.

இதன் மூலம் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாத நிலை உண்டாகும்.  அது மட்டுமின்றி இந்த மண் குவளைகளை உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் இருந்து  வாங்க வேண்டும்.  அதன் மூலம் உள்ளூர் மக்கள் பயனடைவரகள்.  பலருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.   அதை ஒட்டி வாரணாசி ரெயில் நிலையத்தில் மீண்டும் மண் குவளைகள் உபயோகம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

காதி மற்றும் கிராம தொழிற்சாலை ஆணையத் தலைவர் சக்சேனா, ”மண் பாண்டம் செய்பவர்களுக்கு மின் மோட்டார் பொருத்திய சக்கரங்களை நாங்கள் வழங்கி உள்ளோம்.  அவர்கள் இதைக் கொண்டு ஒரு நாளைக்கு சுமர் 600 மண் குவளைகள் தயாரிக்க முடியும்.   அத்துடன் ரெயில்வே மண்குவளைகள் பயன்பாட்டை மீண்டும் தொடங்கி உள்ளது.

எனவே  இனி லட்சக்கணக்கான மண் பாண்ட தொழிலாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.   வாரணாசி மற்றும் ரேபரேலி ரெயில் நிலையங்களில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் மண் குவளைகள் தேவைப்படுகிறது.   எனவே வாரணாசி மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதமர் மோடி ஆவார்.