வண்டலூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீபாவளி பண்டிகை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. பலரும் தத்தம் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் பயண திட்டங்களை வகுக்க ஆரம்பித்து விட்டனர். சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகளையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள வெளிமாவட்ட நபர்கள் பலன்பெறும் வகையில், 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக தென் மாவட்ங்களுக்கு செல்பவர்களுக்காக, வண்டலூருக்கு அருகில் கிளாம் பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது பல முன்னேற்பாடுகள் செய்யப் பட்டன. அது போலவே, இந்த ஆண்டும், ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு களத்தில் இறங்கி இருக்கிறது.

தற்காலிக பேருந்து நிலையத்தில், பயணிகள் பாதுகாப்புக்கென கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. போலீசாரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இருக்கைகள், நிழற்குடை, மக்கள் தொடர்பு மையம், குடிநீர், விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து பணிகளும் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்து முன்பதிவு செய்ய வசதியாக கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் கணினி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணையதளங்களின் வழியாகவும் முன்பதிவு செய்யலாம்.

தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்று அங்கிருந்து பேருந்துகளில் ஏறிச் செல்லலாம்.