ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் 27 வயதான திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் கோயில் பூசாரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பள்ளிக்கரணையில் வசிக்கும் அந்தப் பெண், அதேபகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது அவர் பூசாரி அசோக பாரதியைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பூசாரியிடம் தனது குடும்பப் பிரச்சினைகள் குறித்து கூறிய நிலையில், அவை தீய சக்திகளால் ஏற்பட்டவை என்று அவர் கூறியதாகவும் அதற்கு பரிகாரமாக ருத்ராட்ச மாலை தருவதாக உறுதியளித்து, ஒரு சடங்கிற்காக வடபழனி முருகன் கோயிலுக்கு அழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அசோக பாரதியுடன் அந்தப் பெண் வடபழனி கோயிலுக்கு வந்தபோது கோயில் மூடப்பட்டிருந்ததை அடுத்து அந்தப் பெண்ணை அருகிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு அந்த பூசாரி அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் சென்னை (தெற்கு) காவல் இணை ஆணையரை அணுகினார், மேலும் அவரது புகார் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அசோக பாரதி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் கணவர் தனது அந்தரங்கப் படங்களைக் காட்டி மிரட்டி ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயன்றதாகவும் அவர் தன்னைத் தாக்கியதாகவும் பூசாரி அசோக பாரதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த இரண்டு புகார்களையும் ஏற்றுக்கொண்ட போலீசார் அதன் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.