சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஏராளமான கோவில்களின் சொத்துக்கள், அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர் களால் ஆக்கிரமிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட பல நிலங்கள் தற்போது மீட்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் நிலங்களை கண்டறியவும், கணக்கிடவும், ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறனிர்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பும்வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்..